நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, November 1, 2011

கூடங்குளம்: மத்திய அரசுக்கு விஜயகாந்த் கண்டனம்

 
கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் மக்கள் பிரதிநிதிகளுடன் உடனடியாகப் பேசி பிரச்னையைத் தீர்க்க வேண்டுமே தவிர. வேண்டுமென்றே காலம் தாழ்த்தி சிக்கலை மேலும் மேலும் வலுவடையச் செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கூடங்குளம்  அணுமின் நிலையம் செயல்படுவதை நிறுத்தக் கோரி அப்பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களாக பல வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 18.09.2011 அன்று நான் அங்கு நேரில் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்தேன். அப்பொழுது அந்தப் பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்திய அரசு உடனடியாக அந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
22.09.2011 அன்று தமிழக அமைச்சரவை கூடி மக்களின் அச்சத்தை போக்கும் வரை கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும், பிரதமரை அனைத்துக் கட்சியினரும், போராட்டக் குழுவினரும் இது சம்பந்தமாக சந்திப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமரையும் இக்குழு சந்தித்தது. அதற்கு பிறகு கூடங்குளம் அணுமின் நிலையம் சம்பந்தமான பிரச்சினைகளை மக்களிடம் விவாதிக்க இந்திய அரசு ஒரு நிபுணர் குழுவையும் நியமித்துள்ளது. போராட்டக் குழுவினர் இக்குழுவினை ஏற்கவில்லை.
இதற்கிடையில் இந்திய அரசு அணுமின் நிலையப் பணியாளர்கள் பராமரிப்பு பணிக்காக செல்வதை போராட்டக் குழுவினர் தடுப்பதாகவும், அமைதியாக போராட்டம் நடத்துவதாக தெரிவித்துவிட்டு, வன்முறையை உருவாக்கும் சூழ்நிலையை போராட்டக் குழுவினர் உருவாக்குகின்றனர் என்றும் மத்திய அமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து இந்திய அரசு இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்குப் பதிலாக இதை ஒரு சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாக மாற்றி போராட்டத்தை ஒடுக்குவதற்கு அடக்குமுறையைக் கையாளப்போகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. தாய்மார்கள், பள்ளிப் பிள்ளைகள் உட்பட பல்லாயிரக் கணக்கான மக்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அமைதியான முறையில் போராடி வருவதை அனைவரும் அறிவர். இதை உணர்ந்து மத்திய அரசு போராடும் மக்கள் பிரதிநிதிகளுடன் உடனடியாக பேசி பிரச்னையை தீர்க்க வேண்டுமே தவிர, வேண்டுமென்றே காலம் தாழ்த்தி சிக்கலை மேலும் மேலும் வலுவடையச் செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவது கண்டிக்கத் தக்கதாகும். உடனடியாக இந்தப் பிரச்னையை தீர்க்க மத்திய அரசு முன் வரவேண்டும் என்றும், தமிழக அரசு தான் நிறைவேற்றிய தீர்மானத்தை வற்புறுத்தும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருப்புப் பணம்: சோனியா, ராகுலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்துள்ளதாகக் கூறி வழக்கறிஞர் மனோகர்லால் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

சுவிஸ் நாட்டில் ஒரு வங்கி கணக்கில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்கு சோனியா மற்றும் ராகுல்காந்திக்கு சொந்தமானது என்ற சந்தேகம் உள்ளது. இந்த கணக்கு மீது இவர்கள் இருவரும் இதுவரை உரிமை கோரவில்லை என்ற போதிலும், இந்த சொத்துக்கள் இவர்களுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும்.

கடந்த தேர்தலின்போது தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில், இந்த விபரத்தை இருவரும் மறைத்துவிட்டனர். எனவே, சுவிஸ் வங்கியில் உள்ள சம்பந்தப்பட்ட கணக்கு விபரங்களை பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

அதேபோல சோனியா மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் தங்களது நிலையை விளக்கவும், அந்த கணக்கில் உள்ள பணத்தை இந்திய வங்கிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வு

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு  ரூ 1.82 உயர்த்த முடிவு  செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன    

கச்சா எண்ணெயின்  விலை ஏற்றம் ரூபாய் மதிப்பின் இறக்கம்   போன்ற காரணங்களால் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த விலையேற்றம் அடுத்த இரண்டு வராங்களுக்குள் அமலுக்கு வரும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

முன்னதாக ,பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்  கடந்த இரண்டு மாதங்களுக்குள் லிட்டருக்கு ரூ 5  உயர்த்தியது குறிபிடத்தக்கது

மூடு ஏற்றும் அனுஷ்கா

நடிகை அனுஷ்கா காட்சிக்கேற்றவாறு மூடை மாற்ற ஒரு வழிமுறையை கடைபிடிக்கிறார்.

கோலிவுட்டிலும் சரி, டோலிவுட்டிலும் சரி நடிகை அனுஷ்காவுடன் நடிக்க முன்னணி ஹீரோக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கைநிறைய படங்கள் வைத்துக் கொண்டு ஓடி, ஓடி உழைக்கிறார். அவர் என்ன சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்களும் தயாராக உள்ளனர்.

அனுஷ்கா காட்சிக்கேற்றவாறு மூடை மாற்ற ஒரு வழிமுறையை கடைபிடிக்கிறாராம். ஹீரோவுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்கும்போது, ஆளைத் தூக்கும் அளவுக்கு வாசனை உள்ள சென்ட் அடித்துக் கொள்வாராம். அந்த வாசனையில் ஹீரோவுக்கும் ரொமான்டிக் மூடு வந்து, தனக்கும் நல்ல மூட் வந்து காட்சி சூப்பராக வரும் என்பது அவரது ஐடியா.

அதேபோன்று சோகக் காட்சிகளில் நடிப்பதற்கு முன்பு செட்டில் யாருடனும் பேசாமல் ஒரு ஓரமாக அமைதியாக உட்கார்ந்திருப்பாராம். அவ்வாறு செய்வதால் சோகமான மூடு பார்ம் ஆகி காட்சி கலக்கலாக வந்து விடுமாம். அது மட்டுமல்ல தனக்கு யோகா தெரியும் என்பதால் பிறரையும் யோகா செய்யுமாறு கூறி சில ஆசனங்களையும் கற்றுத் தருகிறாராம்.

பரவாயில்லையே, 'கஷ்டப்படாமல்' நடிப்பைக் கற்று வைத்திருக்கிறாரே அனுஷ்கா...!

வயசு 80 தமிழ் சினிமாவுக்கு

தமிழின் முதல் பேசும் சினிமா 'காளிதாஸ்' 1931ம் ஆண்டு தயாராகி வெளியானது. வட சென்னையில் முருகன் தியேட்டர் என்று அறியப்பட்ட கினிமா சென்ட்ரலில் இந்தப் படம் வெளியானது.

டிபி ராஜலட்சுமி, பிஜி வெங்கடேசன், ராஜாம்பாள், சுசிலா தேவி, எல் வி பிரசாத், எம்எஸ் சந்தானலட்சுமி உள்ளிட்டோர் நடிக்க, மதுரகவி பாஸ்கர தாஸ் கதை, பாடல்கள், இசை ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்றிருந்தார். ஹெச் எம் ரெட்டி இயக்கினார். அர்தேஷ்ரி எம் இராணி தயாரித்த இந்தப் படம்அக்டோபர் 31ம் தேதி வெளியானது.

மும்பையில் தயாரான இந்தப் படத்தின் ரீல் பெட்டிகளை ரயிலில் சென்னை கொண்டுவந்த போது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி மலர் தூவி, மேள தாளம், தாரை தப்பட்டை முழங்க, குதிரை வண்டியில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு போய் கொண்டாடினார்களாம்.

இந்த 80 வருட சினிமா சரித்திரத்தில் முதல் வெற்றிப் படம் என்ற பெருமையும் காளிதாசுக்கே உண்டு. சினிமா என்ற ஆச்சர்யம் தாங்காமல் ரசிகர்கள் திரும்பத் திரும்ப வந்து பார்த்தனர் இந்தப் படத்தை.

இந்தப் படத்தில் பணியாற்றிய பலரும் பெரும் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தனர் பின்னாளில். எல் வி பிரசாத் பெரிய சினிமா சாம்ராஜ்யத்தையே நிறுவினார்.

தமிழ் சினிமா உள்ளவரை நிலைத்திருக்கும் படமாக மாறிவிட்டது காளிதாஸ்.

கனடா பிரதமர் புறக்கணிப்பு

பெர்த் நகரில் காமன்வெல்த் தலைவர்களின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் இறுதியில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டு பேசினார்.

இலங்கையில் 2013ம் ஆண்டு அடுத்த காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு 53 நாடுகளின் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்து உரை நிகழ்த்தினார்.


ராஜபக்சேவை மாநாட்டில் பேச அழைக்கப்பட்டதும் கனடா பிரதமர் ஸ்ரீபன் ஹாபர், மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறினார். இதன் மூலம் ராஜபக்சேவுக்கு தனது எதிர்ப்பை காட்டினார்.


கடந்த வாரம் ராஜபக்சேவுடன், ஸ்ரீபன் ஹாபர் நேரடியாக பேசியிருந்தார். இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அவரிடம் விவாதித்தார். காமன்வெல்த் கூட்டத்திற்கு முன்பாக இதற்கு இலங்கை உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உறுதிப்பட கூறியிருந்தார். அவ்வாறு செய்யாவிட்டால் ராஜபக்சேவின் உரையை புறக்கணிப்போம் என்று கூறியிருந்தார். அதன்படி ஹாபர் வெளிநடப்பு செய்தார்.

கனிமொழியின் ஜாமீன் : சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் கேள்வி


ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவான பின்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. 

இதைத் தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவானதும் சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், குசேகான் நிறுவன இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், பட அதிபர் கரீம் மொரானி ஆகிய 5 பேரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். 

இந்த மனு விசாரணையின் போது அவர்களுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே சமயம் ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் பல்வா, ராசாவின் தனிச்செயலாளர் சந்தோலியா ஆகியோருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து வருகிற 4-ந்தேதிக்கு தீர்ப்பை தள்ளி வைத்து நீதிபதி சைனி உத்தரவிட்டார். 

இந்நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் 4 நபர்களின் ஜாமீன் மனுவை எந்த அடிப்படையில்  எதிர்க்கவில்லை என்பதை சி.பி.ஐ. விளக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

அஞ்சலி....அஞ்சலிதான் - முருகதாஸ்

எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்ததிலிருந்தே அஞ்சலி மீது அத்தனை அன்பாக இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படி சொன்னவுடன் கண், காது, மூக்கு, என்று ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் போட்டு யோசித்தால் ஏமாந்து போவீர்கள் மக்களே... இது அந்த மாதிரி விஷயமல்ல. நவீன சாவித்திரி என்று கொண்டாடாத குறையாக அவரை தலைமேல் வைத்து தாங்கிக் கொண்டிருக்கும் முருகதாஸ் மீண்டும் அவரையே தனது அடுத்த படத்திலும் கதாநாயகியாக்கியிருக்கிறார் என்பதுதான் விஷயம்.

ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியராக இருக்கும் முருகதாஸ் 7 ஆம் அறிவு படத்தில் அதை கோட்டை விட்டு விட்டார் என்று விமர்சகர்கள் பொறிந்தாலும், அவர் மேற்பார்வையில் வெளிவந்த எங்கேயும் எப்போதும், எப்போதும் பேசப்படுகிற அளவுக்கு சிறந்த திரைக்கதையை பெற்றிருந்தது. இப்படத்தின் வெற்றி முருகதாசுக்கு மேலும் மேலும் நம்பிக்கையை கொடுக்க, ஏகபோக சந்தோஷத்தோடு தனது அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் அவர்.

இப்படத்தில் முருகதாசிடம் 7 ஆம் அறிவு படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய திரு என்பவர் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இந்த அறிமுகம் இதோடு நிற்கவில்லை. இப்படத்தின் ஹீரோ முருகதாசின் தம்பிதான்

தி மு கவின் தோல்வி ஸ்டாலின் கண்டுபிடிப்பு

திமுக தலைவர் கருணாநிதிக்கு ஓய்வு கொடுப்பதற்காகத் தான் கடந்த தேர்தலில் எங்களை மக்கள் தோற்கடித்தார்கள் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

வேலூரில் நடந்த திமுக பிரமுகரின் திருமண விழாவில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசுகையில், 1967ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றது. அண்ணா ஆட்சி பொறுப்பு ஏற்றதும் சீர்திருத்த திருமணங்கள் சட்டபடி செல்லுபடியாகும் என்று சட்டசபையில் முதல் தீர்மானம் கொண்டு வந்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் திமுக தலைவர் கருணாநிதி பல நலத் திட்டங்களை கொண்டு வந்தார். அப்படிபட்ட திட்டங்களுக்கு என்ன பரிசு கிடைத்தது? சட்டமன்ற தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தோம்.

ஆனால், அப்படிபட்ட தோல்வியை கண்டு திமுக துவண்டுவிடவில்லை. ஆட்சி மாற்றத்தால் மக்கள் வேதனை தான் படுகிறார்கள். தோல்விக்கான காரணம் குறித்து நாங்கள் ஆலோசித்தோம். அப்போது ஒன்றை உணர முடிந்தது. கருணாநிதிக்கு ஓய்வு கொடுப்பதற்காக தான் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை உணர முடிந்தது.

ஆனால், இப்போது தலைவர் கருணாநிதி கொண்டுவந்த திட்டங்கள் எங்கே என்று மக்கள் தேடி கொண்டிருக்கிறார்கள். உயர் சிகிச்சை, கான்கிரீட் வீடு கட்டும் திட்டம் உள்பட எத்தனையோ திட்டங்கள் இந்த ஆட்சியாளர்களால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்குத் தான் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம் பொய் வழக்குகளையும் தாண்டி திமுக 30 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிறது.. வரும் காலம் நம்முடையது என்பது தெரிகிறது.

எப்போதுமே வெற்றி தோல்வியை சமமாக கருதி உண்மையாக உழைப்பவன் தான் திமுக தொண்டன் என்றார் ஸ்டாலின்.