நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, November 2, 2011

விடுதலையாகும் கனிமொழி

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது ஆன கனிமொழி எம்.பி., 160 நாட்களாக டெல்லி திகார் சிறையில் உள்ளார். 

இந்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ராசா உள்பட 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் கனிமொழி உள்பட 7 பேர் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், குசேகான் புரூட்ஸ் அண்டு வெஜிடபிள்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் அதிபர் கரீம் மொரானி ஆகிய 5 பேரின் ஜாமீன் மனுக்களை சிபிஐ எதிர்க்கவில்லை.

சுவான், டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, ஆ. ராசாவின் முன்னாள் உதவியாளர் சந்தோலியா ஆகியோரை ஜாமீனில் விடுவதற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. 

ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்து இருந்த 7 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது, 3-ந்தேதி தீர்ப்பு கூறப்படும் என்று கோர்ட்டு அறிவித்து உள்ளது. அதன்படி நாளை தீர்ப்பு கூறப்படுகிறது. கனிமொழி உள்பட 5 பேர் மனுக்களை எதிர்ப்பது இல்லை என்று எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்று சிபிஐயிடம் சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டது.

அப்போது சிபிஐ தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் கனிமொழி உள்பட 5 பேருக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என்ற காரணத்தை தெரிவித்தனர். இதை சுப்ரீம் கோர்ட்டு பதிவு செய்து கொண்டது. சிபிஐ விளக்கத்தில் 5 பேருக்கு எதிரான அம்சங்களோ, ஜாமீன் வழங்குவதை பாதிக்கும் எதிரான கருத்தோ இல்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே கனிமொழி நாளை விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோல் சிபிஐ எதிர்க்காத மற்ற 4 பேரும் விடுதலை ஆவார்கள்.   கனிமொழியை சந்திப்பதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி 3 முறை டெல்லி சென்றுள்ளார். கடந்த முறை அவர் சென்றபோது கனிமொழிக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே கனிமொழி விடுதலை ஆனதும் அவருடன் கருணாநிதி, சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தீர்ப்பு நவம்பர் 3-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதால், அன்று ஜாமீனில் அவர் வெளிவர முடியவில்லை. தற்போது சிபிஐ வக்கீல்கள் தங்கள் விளக்கத்தை தெளிவுப்படுத்தி விட்டதால் கனிமொழி நாளை நிச்சயம் ஜாமீனில் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய மந்திரி மு.க. அழகிரி இன்று காலை டெல்லி சென்றார். கே.பி. ராமலிங்கம் எம்.பி. உள்பட கட்சி நிர்வாகிகள் சிலரும் டெல்லி சென்றனர். தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லி செல்கிறார். டி.ஆர். பாலு எம்.பி., வசந்தி ஸ்டான்லி உள்பட அனைத்து தி.மு.க. எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர் பூங்கோதை உள்பட பலர் டெல்லி செல்கிறார்கள்.

நாளை விடுதலையாகும் கனிமொழி எம்.பி-ஐ வரவேற்கவே இவர்கள் டெல்லி செல்வதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.