நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, December 20, 2011

20 வருடமாக அதிமுகவை ஆட்டிப் படைத்த 14 பேர்!!



திமுகவில் அவமானப்பட்டு, தனது உழைப்பெல்லாம் சுரண்டப்பட்ட பின்னர் அதிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர், பின்னர் ஆரம்பித்து தமிழகத்தின் புதிய அரசியல் சக்தியாக மாறிய அதிமுகவை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டிப்படைத்து வந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் பிடியிலிருந்து கட்சி முதல் முறையாக விடுபட்டுள்ளது. சசி குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர்தான் இந்தக் கட்சியை இத்தனை காலமாக ஆட்டிப்படைத்து வந்தவர்கள்.

அந்த 14 பேர் குறித்த ஒரு அலசல்...



எம்என் எனப்படும் நடராஜன்

இந்த குருப்பின் தலைவராக முதலில் இருந்தவர் எம்.நடராஜன். இவருக்கு அதிமுக வட்டாரத்தில் முன்பு எம்என் என்றுதான் செல்லப் பெயர். பலர் எமன் என்றும் கூட மகா செல்லமாக அழைப்பதுண்டு. அந்த அளவுக்கு அதிமுகவை ஆட்டிப் படைத்தவர் நடராஜன் - ஒரு காலத்தில்.

இவர் ஆரம்பத்தில் மாவட்ட செய்தித் தொடர்பு அலுவலராக இருந்தார். அப்போதுதான் கலெக்டராக இருந்த சந்திரலேகாவுடன் நட்பு ஏற்பட்டு அவர் மூலம் தனது மனைவி சசிகலாவை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் நடராஜன்.

பின்னர் ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டு விரட்டப்பட்டார். அதன் பிறகு புதிய பார்வை என்ற மாதம் இருமுறை இதழின் ஆசிரியரானார். தொடர்ந்து இதை நடத்தி வருகிறார்.



சசிகலா

8வது வகுப்பு வரை படித்த சசிகலா, கணவருக்கு அடங்கிய மனைவியாக மட்டுமே இருந்து வந்தவர். இந்தியாவின் மிக முக்கிய அரசியல் தலைவர் ஒருவரின் அசைக்க முடியாத 'சகோதரியாக' மாறுவோம் என்பதை இவர் நிச்சயம் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால் கணவர் நடராஜனின் புண்ணியத்தால் ஜெயலலிதாவின் நிழலாக மாறி கடந்த 29 ஆண்டுகளாக அவரை ஆட்டிப் படைத்த பெருமைக்குரியவர்.

எம்.ராமச்சந்திரன்

இவர் நடராஜனின் தம்பி. தன்னால் முடிந்த வரை அதிமுக மூலம் ஆதாயம் பெற்றவர், தனது செல்வாக்கால் பல காரியங்களை இவரும் நிகழ்த்தியுள்ளதாக கூறுகிறார்கள்.



டாக்டர் வெங்கடேஷ்

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன். ஜெயலலிதாவிடம் கடைசியாக வந்த சசிகலா குடும்பத்தவர்களில் இவரும் ஒருவர். வந்து சேர்ந்த குறுகிய காலத்திலேயே மிகப் பெரும் செல்வாக்கைப் பெற்றார் தனது அத்தை சசிகலாவின் உதவியால்.

ஜெயலலிதாவின் நெருங்கிய வட்டத்துக்குள் வந்து சேர்ந்த குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய அதிகார மையமாக மாறினார் வெங்கடேஷ். கட்சி நிர்வாகிகள் நியமனம் உள்பட பல விஷயங்களிலும் வெங்கடேஷின்ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

வெங்கடேஷால் அவமானப்படுத்த மூத்த தலைவர்கள் பலர் ஒதுங்கிப் போயினர். பலர் கட்சியை விட்டும் வெளியேறினர். ஜெயலலிதா தொடங்கிய இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையின் நிர்வாகியாக இவர் இருந்து வந்தார்.

டிவி மகாதேவன்-தங்கமணி

இந்த இருவரும் சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகனின் பிள்ளைகள் ஆவர். இவர்கள் ஆடிய ஆட்டமும் கொஞ்சநஞ்சமில்லை. அதிலும் மகாதேவின் ஆட்டம் தலைமைக் கழக அலுவலகத்தில் அதிகமாகவே இருந்து வந்தது. இவர்களும் இப்போது ஆப்பு தரப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.




'மகா பெரியவர்' தினகரன்!

சசிகலா குருப்பிலேயே தனி செல்வாக்குடன் இருந்தவர் டிடிவி தினகரன். இவரை பெரியகுளம் எம்.பியாக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அந்த அளவுக்கு செல்லப் பிள்ளையாக வைத்திருந்தார். ஒரு காலத்தில் சசிகலாவுக்கு அடுத்து தினகரனுக்குத்தான் அதிமுகவில் மிகப் பெரிய செல்வாக்கு இருந்தது.

ராஜ்யசபா எம்.பியாகவும் இவரை ஆக்கியவர் ஜெயலலிதா. இவர் சசிகலாவின் அக்காள் வனிதாவின் மூத்த மகன் ஆவார்.




தத்துப் பிள்ளை சுதாகரன்

வனிதாவின் 2வது மகன் பாஸ்கரன் மற்றும் கடைசி மகன் சுதாகரன் ஆகியோரும் அதிமுகவில் ஒரு காலத்தில் செல்வாக்கோடு திகழ்ந்தவர்கள். இவர்களில் சுதாகரனுக்கு, ஜெயலலிதாவின் தத்துப் பிள்ளையாகும் அதிர்ஷடமும் அடித்தது.

நடராஜன் தம்பி மகன்கள் குலோத்துங்கன், ராஜராஜன்

இதேபோல நடராஜனின் தம்பி மகன்களான குலோத்துங்கன், ராஜராஜன் ஆகியோரும் கூட அதிமுகவில் ஓரளவு செல்வாக்கோடு வலம் வந்தவர்கள்தான். இப்போது கூட்டத்தோடு கூட்டமாக இவர்களையும் விரட்டி விட்டார் ஜெயலலிதா.

தம்பி திவாகரன்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள இன்னொருவர் திவாகரன். இவர் சசிகலாவின் தம்பி. இவர்தான் வீட்டுக்குக் கடைசிப் பிள்ளை. மன்னார்குடியில் இருக்கிறார். இவரும் அதிமுகவில் ஆடியவர்தான்.

ராவணன்

அதிமுகவின் ராவணன் என்று அதிமுகவினராலேயே கரித்துக் கொட்டப்பட்டவர் இந்த ராவணன். மிடாஸ் மது பான ஆலையில் இவருக்கும் ஒரு பங்கு உண்டு என்கிறார்கள். இவர் சசிகலாவின் சித்தப்பாவுடைய மருமகன் ஆவார். அதிமுக தலைமைக் கழகத்தில் இவர் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை இருந்ததாம்.

எம்.ஜி.,ஆர். உருவாக்கி வளர்த்த கட்சியை இந்த 14 பேரும்தான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளாளுக்குப் பங்கு போட்டு உண்மையான அதிமுகவினரை கேவலப்படுத்தி, ஓரம் கட்டி, முடக்கிப் போட்டவர்கள் என்பதால் இவர்களது நீக்கத்தால் உண்மையான அதிமுகவினர் மனம் குளிர்ந்துள்ளனர்.