சென்னையில் உள்ள பல்வேறு வங்கிகளில் போலி டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கில் பணம் சூறையாடப்பட்டு வருகிறது. இதனால் வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்போர் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
நவீன முறையில் நடந்து வரும் இந்த சைபர் குற்றச் செயலால் வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் பணத்திற்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் முக்கியத் தகவல்களை நூதன முறையில் திருடி அவற்றை வைத்து போலி கார்டுகள் தயாரித்து அவற்றின் மூலம் ஏடிஎம் மையங்களில், வாடிக்கையாளர்களின் பணத்தை அபகரித்து வருகிறது ஒரு கும்பல். இந்த திருட்டால் வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்போர் அவற்றைப் பறி கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை இதுவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிட்டத்தட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களின் போலி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்த கம்ப்யூட்டரை சோதனையிட்டபோது அதில் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களின் (இவற்றில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் விவரங்களும் அடக்கம்) டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து இன்டர்போல் மூலம் சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள வங்கிகளுக்கு சென்னை போலீஸார் எச்சரிக்கைச் செய்தியை அனுப்பியுள்ளனர். போலி டெபிட், கிரெடிட் கார்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி பணத்தைக் காக்குமாறு அந்த வங்கிகளை அறிவுறுத்துமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் தினசரி சென்னை காவல்துறைக்கு இந்த ஏடிஎம் திருடர்களால் பணத்தைப் பறி கொடுத்து விட்டு பலரும் புகாருடன் வந்தவண்ணம் உள்ளனர். இந்த நெட்வொர்க்கில் மேலும் பலர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அவர்களை வளைத்துப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதுவரை 150 பேர் வரை புகார் கொடுத்துள்ளனர். ஆனால் புகார்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருவதால் ஏடிஎம் கொள்ளைக் கும்பல் பெருமளவில் நகரில் நடமாடுவதாக போலீஸார் அஞ்சுகிறார்கள். இதையடுத்து வாடிக்கையாளர்கள் தங்களது கார்டுகளை ஏடிஎம் மையங்களில் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தக் கும்பலின் தலைவனாக செயல்படும் நபர் இன்னும் சிக்கவில்லை. அவனைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன். சைபர் கிரைம் போலீஸார் தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
ஏடிஎம் மையங்களில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு அனைத்து வங்கிகளையும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுக்க வருவோரை தீவிரமாக கண்காணிக்குமாறும், ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத மையங்களில் உடனடியாக அவற்றைப் பொருத்துமாறும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நல்ல பதிவு . நன்றி
ReplyDelete