அப்பா, பிள்ளை, தாய், மகன், அண்ணன், தங்கை, அக்கா, தம்பி என்று ஏராளமான உறவுகளை படமாக்கிய தமிழ் சினிமாவில் மாமியார்- மருமகன் பாசத்தை மையமாக வைத்து ஏதாவது படம் வந்திருக்கிறதா? அப்படி வரவில்லை என்றாலும் கவலை வேண்டாம். இதோ ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் பெயர் ’பேச்சியக்கா மருமகன்’.
ஒரு மாமியார் தன் மருமகனை மகனாகவும், ஒரு மருமகன் தன் மாமியாரை தாயாகவும் பார்க்க வேண்டும் என்பதை உலகுக்கு சொல்ல வரும் படம்தானாம் இது.
’மாயாண்டி குடும்பத்தார்’ படத்தில் தாய் தந்தை இல்லாத பிள்ளையாக நடித்து அனைவரையும் கண்கலங்க வைத்த தருண் கோபிதான் இப்படத்தின் ஹீரோ. இந்த படத்தின் கதை வசனத்தையும் இவரேதான் எழுதியிருக்கிறார். இயக்குனர் மட்டும் வி.பி.பாலகுமார் என்ற புதியவர்.
’மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் இசையமைப்பாளர் சபேஷ் முரளிதான் இப்படத்திற்கும் இசை. சரி போகட்டும்... மருமகனாக தருண் கோபி நடித்திருக்கிறார். மாமியாராக? இதுவரை 500 படங்களுக்கு மேல் நடித்து தென்னிந்திய மொழிகளில் எல்லாரையும் கவர்ந்திருக்கிற ஊர்வசிதான் அந்த கேரக்டரில் நடிக்கவிருக்கிறார். நகைச்சுவை கேரக்டர்கள் கொடுத்தால் பிரித்து மேய்ந்துவிடும் ஊர்வசி, இந்த படத்தில் நெஞ்சை தொடும் குணச்சித்திர நடிகையாக நடித்திருக்கிறாராம்.
திமிரு, காளை’ போன்ற படங்களை இயக்கியவர் தருண் கோபி. ’மங்காத்தா, ஆறுமுகம், பேராண்மை’ உள்ளிட்ட ஏராளமான படங்களின் விநியோகஸ்தரான மன்னன் பிலிம்ஸ்தான் இந்த படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
எவ்வளவுதான் தமிழ்நாட்டிலிருக்கும் உறவுகளை பற்றி பேசினாலும், அதில் நடிக்க மும்பை நடிகைகளைதான் நாட வேண்டி இருக்கிறது. இந்த படத்திலும் பிரியங்கா என்ற நடிகையை அழைத்து வந்திருக்கிறார்கள்.’ பேச்சியம்மா ’ படத்தில் அறிமுகமாகும் இவர் பேசப்படுவாரா என்பதுதான் சஸ்பென்ஸ்