நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, December 13, 2011

அன்புள்ள ரஜினிகாந்த்...


சூப்பர் ஸ்டார் என திரையுலகம் கொண்டாடும் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12. தமது பிறந்த நாளைக் கூட அறிந்திராத பல ரசிகர்கள் கொண்டாடத் துடிக்கும் திருநாள். அதிலும் உடல் நலக் குறைவு காரணமாக முக்கியமான சிகிச்சை மேற்கொண்டு மறு பிறவி எடுத்துள்ளதால் இந்த ஆண்டு ரஜினி பிறந்த நாள் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

"கட் அவுட்'டுகள், தோரணங்கள், போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள், இணையதளங்களில் சிறப்புக் கட்டுரைகள் என தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் தங்களது தங்கத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தும் வாழ்த்த வயதில்லாதவர்கள் வணங்கியும் தங்களது அன்பைப் பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள். தாங்கள் விரும்பும் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதில் தவறேதும் இல்லைதான்.

அதே சமயம் நடுநிலையோடு செயல்பட வேண்டிய ஊடகங்களும் ரசிகர்களுக்குப் போட்டியாக ரஜினியின் பிறந்த நாளை பல சிறப்பு நிகழ்ச்சிகள் வாயிலாக ஒளிபரப்பி விளம்பர வருவாய் மூலம் பணமீட்டி வருகின்றன. நாளிதழ்களும், வார இதழ்களும் சிறப்பு மலர்களை வெளியிட்டுள்ளன.

சரி போகட்டும்... மக்கள் செல்வாக்குள்ள நட்சத்திரத்தைப் பற்றி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தங்களது நேயர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி அவர்களது வரவேற்பைப் பெற இது போன்ற உத்திகள் தேவைப்படுகின்றன என எடுத்துக்கொள்ளலாம்.

ரஜினிகாந்த் இவற்றையெல்லாம் எப்படி எடுத்துக்கொள்கிறார்? தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ரசிகர்கள் தன்னைப் பார்க்க சென்னைக்கு வர வேண்டாம் என்றும் அப்போது அவர் இமயமலையிலோ, பெங்களூரிலோ அல்லது படப்படிப்பிலோ இருப்பதாகவும் செய்திகள் வெளியாகும். பிறந்த நாளுக்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும்போது போக்குவரத்து பிரச்னை, எதிர்பாராத விபத்து, தேவையற்ற செலவு போன்றவற்றால் தன்னுடைய ரசிகர்கள் அலைக்கழிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதுதான் ரஜினியின் உண்மையான கவலை. மற்றபடி, தன்னை வாழ வைத்த தமிழ் ரசிகர்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவருக்கு இருந்ததில்லை என்பதை அவருடைய பேச்சும் நடவடிக்கைகளும் உணர்த்துவதாகவே கருதிக்கொள்வோம்.

அதனால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஏழை எளியோருக்கும் ஆதரவற்றோருக்கும் உதவிகள் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதbharathi_112aa வகையில் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுங்கள் என தன்னுடைய ரசிகர் மன்றங்களுக்கு அன்புக் கட்டளையிடுவதுண்டு. அதை ரசிகர்களும் பின்பற்றுவதுண்டு. இப்படியாக பல வருடங்கள் கடந்துகொண்டிருக்கின்றன. இனியும் கடக்கலாம். ஆனால் ரஜினி நினைத்தால் இந்த நிலையை மாற்றலாம். ஏன்?

அதற்குக் காரணம்... கண்ணீரை வரவழைக்கும் கவலை தரக் கூடிய ஓர் இன்றியமையாத விஷயம்தான். நூற்றுக்கணக்கானவர்களிடம் கேட்டு அறிந்து அல்ல "அதிர்ந்த' பிறகே இங்கே இந்தக் கருத்து முன் வைக்கப்படுகிறது.

விஷயம் இதுதான்... "டிசம்பர் 12 என்ன நாள்?' என்று கேட்டபோது 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் உடனடியாக "அன்று ரஜினி பிறந்த நாள்' என்று சரியாகக் கூறினர். அதே போல "டிசம்பர் 11 என்ன நாள்?' என்று கேட்டபோது உண்மையில் 15 லிருந்து 20 சதவீதம் பேர் மட்டுமே "அன்று மகாகவி பாரதியார் பிறந்த நாள்' என்றனர். அவர்களில் கூட சிலர் "அன்று பாரதியார் பிறந்த நாளோ, இறந்த நாளோ' என்று சந்தேகத்துடன்தான் கூறினர்.

வேற்று மாநிலத்தில் பிறந்த ரஜினி பிறந்த நாளைக் கோலாகலமாகக் கொண்டாடத் தெரிந்த நம்மில் பலருக்கு எட்டையபுரத்தின் எழுச்சி நாயகன் பாரதியின் பிறந்த நாள் கூட சரியாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் என்ன? நடிகர், நடிகையர் பிறந்த நாளை போட்டி போட்டுக்கொண்டு கொண்டாடும் ஊடகங்கள், பாரதியின் பிறந்த நாளைப் பற்றி அதிகமாக அலட்டிக்கொள்ளாததுதான்.

அது சரி... பாரதி என்ன செய்துவிட்டார்?

தானும் தன் குடும்பமும் பசித்திருந்தபோதும் தமக்கான உணவை காக்கை, குருவி எங்கள் ஜாதி என அவற்றுக்கு வாரி வழங்கிய "கஞ்சன்'தானே?

தன்னுடைய எழுச்சிமிகு எழுத்துகளாலும் புதிய சிந்தனை கொண்ட புரட்சிப் பாடல்களாலும் நாட்டில் சுதந்திர வேட்கையை விதைத்த "தீவிரவாதி'தானே?

சாதிய வெறியையும், உயர் சாதி-கீழ் சாதி வேறுபாடுகளையும் களைந்து சமுதாயத்தில் சம தர்மத்தை நிலை நிறுத்த முயற்சித்த பிரிவினைவாதிதானே?

நாடு சுதந்திரம் பெறாத போதே "ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்' என சுதந்திரப் பள்ளு பாடிய "பிற்போக்குவாதி'தானே?

இன்றும் சர்ச்சைக்குள்ளாகி வரும் சேது சமுத்திரத் திட்டம், நதி நீர் இணைப்பு குறித்து அன்றே "சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம், வங்கத்திலோடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளிற் பயிர்செய்குவோம்' என்று விழித்துக்கொண்டே கனவு கண்ட "சோம்பிலிதானே'?

நினைவில் வைத்துக்கொண்டாட இன்னும் என்னவெல்லாம் காரியம் செய்து தொலைத்திருக்கிறான் பாரதி?

"எமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்' என்று தனக்குத் தொழில் "நாட்டுப் பணி' என்று ஆணித்தரமாகக் கூறி அதன்படி வாழ்ந்துகாட்டி வறுமையில் உழன்ற பாரதி, அவர் வாழ்ந்த காலத்திலேயே "பிழைக்கத் தெரியாதவன்' என்று போற்றப்பட்டவர். அப்படிப்பட்ட ஒருவருடைய பிறந்த நாளை நினைவில் வைத்துக் கொண்டாடுவதா என நினைத்தோ என்னவோ பலர் மறந்திருக்கலாம்.

விஷயத்திற்கு வருவோம்... ஆக ரஜினிகாந்த் வழக்கமாகத் தன்னுடைய பிறந்த நாளை மேற்கூறியவாறு ரசிகர்களிடம் இருந்து ஒளிந்தும், மறைந்தும், விலகியும் கொண்டாடி வருகிறார். அதுசரி, பாரதியின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த ஒரு விஷயத்தில் இங்கு ரஜினி ஏன் வருகிறார்? அவருடைய அபரிதமான மக்கள் செல்வாக்குதான் காரணம்.

எத்தனையோ நடிகர்கள் கட்சி தொடங்கினாலும் ரஜினிக்கு என்று ஒரு மாபெரும் இளைஞர் பட்டாளமும் அபிமானிகளும் இருப்பதை மறுப்பதற்கில்லை. அந்த சக்தியை அவர் புதிய வழியில் பயன்படுத்தி பாரதியின் புகழை மென்மேலும் பரப்பலாம்.

bharathiar4அதாவது தன்னுடைய பிறந்த நாளுக்கு முதல் நாள் வரும் மகாகவியின் பிறந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாடி, அந்த நாளில் பாரதி பற்றிய கருத்தரங்குகள், அவருடைய சிறப்புகள், நாட்டுக்கு அவர் ஆற்றிய நற்செயல்கள், அவருடைய பாடலின் பெருமைகள் போன்றவற்றைத் தகுந்தவர்கள் மூலம் பரப்ப தனது ரசிகர்கள் மன்றங்களைப் பணிக்கலாம். அப்படிச் செய்தாலே அது தனது பிறந்த நாளைக் கொண்டாடியதற்கு சமம் என அறிவிக்கலாம்.

ரஜினி ஒரு தடவை சொன்னால் போதாதா? ரசிகர்கள் அவர் எதிர்பார்ப்பதை விட நூறு மடங்கு செய்துகாட்டி விடமாட்டார்களா? ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களிடமும் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும். ரஜினி ரசிகர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல மரியாதை உண்டாகும்.

தன் பின்னால் அலையும் ஊடகங்களை ரஜினிகாந்த் இந்த நல்ல காரியத்துக்கு அருமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஊடகங்கள் ஒரே நாளில் உலகின் போக்கையே மாற்றி விடும் வல்லமை பெற்றவை. உதாரணத்துக்கு, கடவுளர்களைப் பற்றி ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் உருவான "திருவிளையாடல்', "சரஸ்வதி சபதம்', "கந்தன் கருணை' போன்ற படங்களைக் குறிப்பிடலாம். இவை உள்ளிட்ட இது போன்ற படங்கள் வெளிவருவதற்கு முன்பு சிவபெருமான், விநாயகர், முருகப் பெருமான், சரஸ்வதி தேவி உள்ளிட்ட பல கடவுளர்களைப் பற்றிய மக்களின் சிந்தனை இந்தப் படங்கள் வெளியான பிறகு முற்றிலும் மாறின. படித்தவர்கள், கேள்வியறிவு பெற்றவர்கள் என குறிப்பிட்ட சாரார் மட்டுமே அறிந்திருந்த கடவுள் புராணங்களையும் சுதந்திரப் போராட்ட வரலாற்றையும் காட்சிகள் வாயிலாக பாமரனையும் சென்று அடையச் செய்ததில் சினிமா ஊடகம் பெரும்பங்காற்றியிருக்கிறது.

அப்படிப்பட்ட சினிமா ஊடகம் மூலம் உலகின் பெரும்பாலான நாடுகளில் புகழ் பெற்றவரும் ஒரு கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் செல்வாக்குள்ள ஐம்பது பிரபலங்களில் ஒருவருமான ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் ஆவன செய்யலாம்.

தமிழகத்தில் ஆன்மிக ஆர்வலர்கள் மட்டுமே அறிந்து வணங்கி வந்த ராகவேந்திர சுவாமிகளைத் தன்னுடைய இஷ்ட தெய்வம் என்று ரஜினி சொன்னதாலேயே அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்பட ஏராளமானோர் ராகவேந்திரர் பக்தர்களாக மாறி, ருத்திராட்சம், துளசி மாலை அணிந்து வியாழக்கிழமைகளில் ராகவேந்திரர் ஆலயங்களுக்குப் படையெடுத்ததையும் கண்டிருக்கிறோம்.

மற்றவர்கள் கட்சி தொடங்கி புரட்சி செய்யட்டும். ரஜினிகாந்த் மக்களுடைய மனங்களைக் கவரும் விதத்தில் தனக்கேயுரிய வித்தியாசமான பாணியில் நல்ல காரியங்களைச் செய்து "தன் வழி தனி வழி' என நிரூபிக்கலாம். அதன் பிறகு மாநிலம், மொழி பேதமில்லாமல் மக்களே அவரை அரசியலுக்குக் கூட விரும்பி அழைத்து வரக்கூடும்.

அதனால் தமிழ்த் தாயின் தவப்புதல்வன் பாரதியின் புகழை பாரெங்கும் பரப்ப மேற்கூறப்பட்ட கருத்துகளைப் பற்றி ரஜினி கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் செய்தால் அவரைப் பின்பற்றி பல பிரபலங்களும் தங்களது பிறந்த நாள்களைக் கேளிக்கை, விருந்து என களிக்காமல் தங்களது ஆதரவாளர்களை ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்படுத்த வாய்ப்புண்டு. ஊடகங்களும் தமது மனப்போக்கை மாற்றிக்கொள்ள வழிகோலும்.

புனிதமான மனிதன், நேர்மையான பத்திரிகையாளன், பயன்படு கவிஞன், பன்மொழிப் புலவன், சமூக சீர்திருத்தவாதி, பெண்ணுரிமைப் போராளி, தத்துவஞானி, தீர்க்கதரிசி, அப்பழுக்கற்ற தேச பக்தன் என பல முகங்களைக் கொண்ட சுப்பிரமணிய பாரதி என்ற மகாகவிஞனுக்கு இந்த மெகா கலைஞன் என்ன செய்யப் போகிறார்?

நாடு போற்றும் ஒரு கவிஞனின் புகழைப் பாட ஒரு சினிமாக்காரனை நாடுவதா என சிலர் நினைக்கலாம். அந்த எண்ணம் கூட அவர்கள் பாரதியின்பால் கொண்ட அன்பால்தான் என உணர முடியும். ஆனால் இந்த விஷயத்தில் காரியம் பெரிதா? வீரியம் பெரிதா? எனக் கருதும்பட்சத்தில் காரியமே பெரிது என எடுத்துக்கொள்ளுதலே தகும்.

வேறு என்ன செய்ய..? பாரதி என்ற அவதார புருஷனை மறந்துவிட்டவர்களுக்காக, அவர் புகழ் பாடவும் புகழ் நிலைக்கவும் மக்கள் செல்வாக்குள்ள ஒரு மனிதனிடம் மனமிரங்கி இறைஞ்சும் சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்த இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைக்கும்போது நமக்கும் நெஞ்சு பொறுக்குதில்லைதான்!


நன்றி : மனோஜ் கிருஷ்ணா
தினமணி

1 comment:

  1. நெஞ்சம் பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்தால்...!!!

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...