நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, November 23, 2011

’குடி’ மகன் வயிற்றில் அடிக்கலாமா?

”யோவ், நீ நல்லா இருப்பியா, புட்டி மேலே அதிக துட்டு கேட்டு குடிகாரன் வயித்துல அடிக்கிறே...?”

“யோவ் கேக்ற துட்டு குடுக்கறதா இருந்தா குடு இல்லே சரக்கு கடியாது கிளம்பு...!”

இந்த டயலாக் சென்னையில் உள்ள ‘டாஸ்மாக்’ மது விற்பனை கடைகளில் வாடிக்கையாளர்களுக்கும் கடை ஊழியர்களுக்கும் நடைபெறுகின்ற சச்சரவில் தினந்தோறும் கேட்கப்பட்டு வருகிறது.

மது வாங்க வருபவர்களிடம் பாட்டிலில் குறிப்பிட்டு இருக்கும் விலையை விட, 3, 4, 5, 6, 7 ரூபாய் என்று அதிகமாக வசூலிக்கிறார்கள். அப்பாவி போல் காட்சியளிக்கும் மற்ற மாநிலத்தவர்களிடம் 10,15 ரூபாய் என்று கூடுதலாக பெற்றுக் கொண்டுதான் விற்பனை செய்கிறார்கள்.

இந்த அநியாயத்தை(!?) எதிர்த்து குரல் கொடுப்பவர்களுக்கு மது விற்கப்படுவதில்லை. “வேணும்னா வாங்கிட்டு போய்யா, இல்லாட்டி எங்காவது போய் கம்ப்ளயின்டு செய்” என்று விரட்டி விடுகிறார்கள் ஊழியர்கள். எந்த ஒரு கடையிலும் பாட்டிலில் குறிப்பிட்டுள்ள கட்டணம் வசூல் செய்வதில்லை. குறிப்பிட்டுள்ள கட்டணத்தை சரியாக கொடுத்தாலும் அதிக கட்டணம் கொடுத்தால்தான் மது வாங்க முடியும் என்ற நிலைமை தான் எங்கும் உள்ளது.

டாஸ்மாக் கடைகளில் கம்ப்யூட்டர் முறையை ஏற்படுத்தினால் ஊழியர்களின் பகல் கொள்ளையை ஓரளவுக்கு தடுக்க முடியும் என்கிறார்கள் சில சிறந்த(!) குடிமகன்கள். அத்துடன் போலி சரக்கு விற்பனையும் கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள்.

விற்பனையாளர்களிடம் ஒற்றுமை இருந்தால், பங்குபோடும் மனமிருந்தால் அவர்களால் எளிதில் போலி சரக்குகள் கடைகளிலேயே விற்பனை செய்ய முடியும். சமீபத்தில் வெளிவந்த செய்தியில் டாஸ்மாக் கடைகளில் வருவாய் குறைந்து வருவதால் அரசு அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது. இந்த வருவாய் இழப்பிற்கு காரணம் போலி மதுவிற்பனையாக இருக்கலாம் அல்லவா.


 
பக்கத்து மாநிலமான கேரளாவில் கம்ப்யூட்டர் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட மது கடைகள் எவ்வித சச்சரவும் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. அங்கு ஒருபோதும் வாடிக்கையாளர்களுக்கும் கடை ஊழியர்களுக்கும் தகராறு ஏற்படுவதில்லை. காரணம், மது வகைகளை அங்கே வாங்கினால் பில் உண்டு. தமிழ்நாட்டில் பில் கிடையாது.

கேரளாவில் மது விற்பனை கடைகளில் க்யூ நிற்பதற்கு கம்பி வேலி உண்டு. பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற பலவகை மதுவுக்கு தனி கியு காணலாம். ’ரம்’ அதிகமாக விற்பனை ஆகுவதால் அதற்கு தனி கவுண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாட்டில்களில் பெரிய எழுத்தில் அதன் விலை எழுதி மாட்டிவைத்து இருக்கிறார்கள். இதனால் அந்த பாட்டிலுக்கு என்ன விலை என்று கேட்க வேண்டிய அவசியமில்லை. கியூவில் நிற்பவர் முதல் கவுண்டரில் தனக்கு வேண்டிய மது பற்றி கூறும் போது உடனே கம்ப்யூட்டரில் பில் அடித்து வழங்கப்படும். அத்துடன் அடுத்த ஊழியரை அனுகினால் மது கிடைக்கும். அதை காகிதத்தில் நன்றாக சுற்றி கடமை(!!!) உணர்வுடன் வழங்குகிறார்கள். அங்கு எவ்வித பேச்சுக்கும் இடமில்லை.



ஆனால், தமிழகத்தில் தி.மு.க., ஆண்ட போதும் இப்போது அ.தி.மு.க. ஆளுகின்ற போதும் மது விற்பனை கடைகளில் ஏனோ கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில்லை. இதனால் பல கடைகளில் போலி மது விற்பனை மிக எளிதாக நடைபெற்று அரசு வருவாய் குறைப்பது மட்டுமின்றி பாவம் குடிமகன்களையும் அல்லல்படுத்துகிறார்கள். அரசுக்கு அதிக வருமானம் ஈட்டு தரும் குடிமகன்கள் மீது ஏன் இந்த வஞ்சனை?

ஓட்டல்களில், மருந்துக் கடைகளில் இன்னும் பல வியாபாரம் நடத்தும் தனியார் கடைகளில் பில் போடவில்லை என்றால், வணிக வரித்துறையினர் சோதனை நடத்துகிறார்கள்.

அப்படியென்றால், அரசே நடத்தும் கடைகளில் ஏன் பில் போட மறுக்கிறார்கள். இதன் மூலம் எத்தனை கொள்ளை நடக்கிறது. அதை தடுக்க வேண்டிய அரசாங்கம் கைகட்டி கொண்டு இருப்பதன் நோக்கம் என்ன?



3 comments:

  1. இத தாங்க நான் அப்பவே கேட்டேன் ...

    http://naai-nakks.blogspot.com/2011/10/blog-post.html

    ReplyDelete
  2. ஆனா யாருமே பதில் சொல்லலை ...
    ஒருதர் மட்டும் பாண்டி-ல கிடைக்குதுனு
    சொன்னார் ...

    ReplyDelete
  3. கேரளா தமிழகத்திற்கு பல விஷயங்களில் முன்மாதிரியாக விளங்குகிறது...

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...